எங்கள் சமூகத்திற்கு,
ஆட்டிசம் குறித்து சமீபத்தில் வெளியான கருத்துகள், நீண்ட காலமாக நிலவிவரும் தவறான நம்பிக்கைகள் மற்றும் மிகவும் தீவிரமான பாதிப்பைகளை ஏற்படுத்தக்கூடிய மொழிகளை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளன. இது நாங்கள் சேவை செய்யும் நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஆழமாகவே பாதிக்கக்கூடியதாக இருக்கலாம். சமவுரிமை, சேர்க்கை மற்றும் கலாசாரத்துடன் ஒத்துப்போகும் ஆட்டிசம் சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ள நிறுவனமாக, தெளிவாகவும் பரிவுடனும் பதிலளிப்பது அவசியம் என நாங்கள் கருதுகிறோம்.
ஆட்டிசம் ஒரு நெருக்கடியல்ல. இது தவிர்க்க வேண்டிய ஒரு துயர சம்பவமல்ல.
ஆட்டிசம் பரவல் காலப்போக்கில் அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், இது அதிக விழிப்புணர்வும் மேம்பட்ட பரிசோதனை முறைகளும் காரணமாகும் – திடீரென அதிகமான ஆட்டிசம் நபர்கள் தோன்றியதாலல்ல.
“அசிங்கமானது” அல்லது “தாங்க முடியாதது” போன்ற கடுமையான சொற்களை இந்த மாற்றங்களை விவரிக்க பயன்படுத்துவது, ஆட்டிசம் நபர்களின் உண்மை வாழ்க்கையையும், அவர்களின் வலிமைகளையும், மனிதத்துவத்தையும் பிரதிபலிப்பதில்லை. இது களங்கப்படுத்துகிறது. தனிமைப்படுத்துகிறது. மேலும், அனைவருக்கும் புரிதல், ஆதரவு மற்றும் அதிகாரமளிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட சமூகங்களை கட்டியெழுப்பும் முயற்சியில் திசைமாறச் செய்கிறது.
தடுப்பூசிகள் மற்றும் ஆட்டிசம்
தடுப்பூசிகள் மற்றும் ஆட்டிசம் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை தற்போதைய அறிவியல் ஆதாரங்கள் உறுதியாகக் கூறுகின்றன. இது பல ஆண்டுகளாக தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட ஒரு கேள்வியாகும். உலகளாவிய அளவில் முன்னணி சுகாதார நிறுவனங்கள் அனைத்தும் இதை உறுதிப்படுத்துகின்றன: தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, மேலும் அவை ஆட்டிசத்திற்கு காரணம் அல்ல.
அசெட்டமினோபேன் ( Tylenol – டயிலெனால்) மற்றும் கர்ப்பம்
கர்ப்பத்தின் போது அசெட்டமினோபேன் பயன்படுத்தும் நிகழ்வுகள் மற்றும் குழந்தையின் நரம்பியல் வளர்ச்சி இடையே உள்ள சாத்தியமான தொடர்புகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. சில சிறிய ஆய்வுகள் குறைந்த அளவிலான தொடர்பைச் சுட்டிக்காட்டினாலும், அவற்றில் பல மாறுபாடுகள் உள்ளன, மற்றும் இந்த ஆய்வுகள் காரண-விளைவு உறுதி செய்யக்கூடியவை அல்ல. சகோதரர்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பெரிய ஆய்வுகளில், கர்ப்ப காலத்தில் அசெட்டமினோபேன் பயன்படுத்தியதற்கும் ஆட்டிசம் இடையே தொடர்பு காணப்படவில்லை.
சரியான முறையில் பயன்படுத்தப்படும் போது, கர்ப்பத்தில் அசெட்டமினோபேன் பாதுகாப்பானதாகவே மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எப்போதும் போல, குடும்பங்கள் தங்களுக்கேற்ற அறிந்த முடிவுகளை எடுக்க தங்களது மருத்துவ நிபுணர்களை கலந்தாலோசிக்க வேண்டும்.
Leucovorin (லூக்கோவோரின்) சிகிச்சையாக?
லூக்கோவோரின், சம்பந்தப்பட்ட உடலியல் வேறுபாடுகள் உள்ளவர்களுக்கு சிகிச்சையாக பயன்படலாம் என சில முன்னேறிய, ஆனால் வரையறுக்கப்பட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது முழுமையான மருந்தல்ல; அனைவருக்கும் தேவையானதோ அல்லது பயனளிக்கக்கூடியதோ அல்ல. எந்த சிகிச்சையும் போலவே, குடும்பங்கள் தங்களது குழந்தையின் தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்து, தகுந்த மருத்துவ நிபுணர்களை அணுக வேண்டும்.
AUTISM 101 – SAAAC Autism Toolkit
நாங்கள் தயாரித்துள்ள SAAAC Autism 101 Toolkitஐ நீங்கள் கண்டறிய அழைக்கிறோம். இது ஆட்டிசத்தை “சரிசெய்யவேண்டிய” ஒன்றாக அல்லாது, மனித வித்தியாசத்தின் ஒரு பகுதியாக மரியாதை மற்றும் மதிப்புடன் அறிமுகப்படுத்துகிறது. இந்த Toolkit, குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் புரிதலை வளர்க்கவும், களங்கத்தை குறைக்கவும், ஒவ்வொருவரின் தனித்துவமான வலிமைகளை கொண்டாடவும் உதவுகிறது.
மேலும் தகவல்களுக்கு:
நாங்கள் பரிந்துரைக்கும் பின்வரும் நம்பகமான வளங்களை நீங்கள் ஆராயலாம். இவை எல்லாம் குடும்பங்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூகங்களுக்கு அறிவு மற்றும் கருணையுடன் ஆட்டிசத்தை வழிநடத்த உதவும் ஆதாரபூர்வமான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன:
Holland Bloorview comments on U.S. report on autism
Autism Alliance of Canada Statement
WHO statement on autism-related issues
SAAAC-இல், எங்களுக்கு முக்கியமானது ஒன்றுதான்: குடும்பங்களை மரியாதையுடன், பரிவுடன், மற்றும் ஆதாரபூர்வமான பராமரிப்புடன் ஆதரித்தல். நாங்கள் தொடர்ந்தும் களங்கத்தை எதிர்க்கும் பணியில் ஈடுபட்டு, புரிதலை ஊக்குவித்து, ஒவ்வொரு ஆட்டிசம் நபரும் மரியாதையுடன் அணுகப்படுவதை உறுதி செய்வோம் — பயத்துடன் அல்ல.
– SAAAC Autism Centre குழு